« तू इस ग़रीब पे दिखला के देख प्यार ज़रा | உலகப்பொதுமை » |
என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி
Tamil Poetry |
“இடி மின்னலுடன்
இருநிலம் வந்து,
மீண்டும் நீராவியாய்
மேலெழுந்து சென்று,
வைரத் துளிகளாய்
வையத்தில் விழுந்து,
இயற்கைக்கு இதயமாய்
இருப்பவள் நானே!
தாயாய்த் தாலாட்டிய
தென்றலுக்கு நன்றி சொல்ல,
மாரியாய் வந்து
மரங்களை வளர்க்கிறேன்!
நெல்லுக்கு இறைத்தநீர்,
புல்லுக்கும் புசிவதுபோல்;
மக்களுக்கும் மாக்களுக்கும்,
சேர்ந்தே பொழிகிறேன்!
தன்னைத் தோண்டுவாரையும்
தாங்கும் நிலம்போல்;
மரங்களை வெட்டும்
மனித குலத்தையும்,
எவ்வித குறையும்
இல்லாமல் காக்கின்றேன்!
மனித குலத்தின்,
காட்டை அழித்து
நாட்டை விரிக்கும்;
நாசப்பணி தொடருமாயின்,
இயற்கையின் இன்பக்காற்றை
முகர முடியுமோ?
என் பிறப்பிற்கே
அவலம் நேர்ந்திடுமோ?
சாதிவெறி நிறைந்த,
சராசரி மக்களே!
என்னிடம் கற்றிடுங்கள்,
நடுநிலைத் தன்மையை!
பயன்தரும் ஆறுகளிலும்,
பயனிலாக் குட்டைகளிலும்,
எவ்விதப் பாகுபாடுமின்றி,
என்றென்றும் பொழிகிறேன்!
அத்துணை உயிர்களையும்,
அன்பினால் அணைத்திட;
வெட்கமின்றி கற்றிடுங்கள்,
மாமழையாம் என்னிடம்!”
இங்ஙனம்,
அமுதூட்டும் கூக்குரலில்,
ஆருயிர்கள் அனைத்திடமும்;
சொல்லிக்கொண்டே விழுகிறது,
சொக்கவைக்கும் மழைத்துளி!